×

6 பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க தற்காலிக தடை விதிப்பு

சேலம், ஏப்.12:சேலம் மாவட்டத்தில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்ய தற்காலிக தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்களின் நலன்கருதி அபாயகரமான 6 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இதனை மீறி அந்த மருந்துகளை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பேரில், சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளின் விவரத்தை அறிவித்து, அவற்றை யாரும் விற்பனை செய்யக்கூடாது என கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் உழவர் நலத்துறை சார்பில் அபாயகரமான 6 வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை வரும் 29ம் தேதி வரை விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அசிபேட், மோனோ குரோடோபாஸ், குளோரி பைரிபாஸ், புரோபனோபாஸ், குளோரி பைரிபாஸ்+சைபர் மெத்ரின், புரோபனோபாஸ்+குளோரி பைரிபாஸ் ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்கக்கூடாது. இதேபோல், 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடால்) எலி மருந்து நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகிய இடங்களில் விற்பனை செய்யக்கூடாது. மாவட்டத்தில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், இப்பூச்சிக்கொல்லி மருந்துகளை தடையை மீறி விற்றால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறியுள்ளார்.

The post 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க தற்காலிக தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem district ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே தொடர்மழை காரணமாக வீட்டின்...